தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் உணவு உற்பத்தி... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நீர் வளத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் 2050-ம் ஆண்டுக்குள் உலக உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என நெதர்லாந்தை மையமாக கொண்டு இயங்கும், உலகளாவிய தண்ணீர் பொருளாதாரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு உருவான உலகளாவிய தண்ணீர் பொருளாதாரத்துக்கான ஆணையம், விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை கொண்டு நடத்தப்பட்ட நீர் தேவை குறித்த ஆய்வின் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் 200 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமலும், 360 கோடி மக்கள் சுகாதார குறைபாட்டுடனும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் 1,000 குழந்தைகள் சுத்தமான நீர் கிடைக்காத காரணத்தால் உயிரிழந்து வருகின்றனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் சுத்தமான நீருக்கான தேவை 40 சதவிகிதமாக உயரக்கூடும். இது மோசமடையும் பட்சத்தில், 2050ஆம் ஆண்டில் உலகளவில் 8 சதவிகிதம் ஜிடிபி இழக்கக்கூடும். ஏழை நாடுகள் 15 சதவிகிதம் வரை இழப்பை சந்திக்கும். இதனால், உலகளவில் உணவு உற்பத்தி பாதியாக குறைந்துவிடும். மோசமான பொருளியல்நிலை, வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்றவையே உலக நீர் நெருக்கடியை மோசமாக்கியதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒருவருக்கு ஒரு நாளுக்கு 50 முதல் 100 லிட்டர் நீர் தேவைப்பட்டாலும், போதுமான ஊட்டச்சத்து மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சுமார் 4,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் இந்த அளவை அடைய முடியாது.
உலகளவில் நீர் அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தாலும், அதனை நிர்வகிக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் நீர் தொடர்பான ஒரே ஒரு மாநாட்டை மட்டுமே ஐ.நா. நடத்தியுள்ளது. கடந்த மாதம்தான் நீருக்கான சிறப்புத் தூதரை ஐ.நா. நியமித்தது.
பல நாடுகளில் தொழிற்சாலைகள் நீரை உபயோகிக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும், மாசுபாடு புறக்கணிக்கப்படுகிறது. இதனால் வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் நீர் தேவைக்கு அதிக விலை கொடுக்கும் சூழல் உள்ளது. மேலும், சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதற்கு தள்ளப்படுகிறார்கள். தீங்கு விளைவிக்கும் மானியங்களை அகற்றுவதும், ஏழை மக்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதையும் அரசாங்கங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
மேலும், சுழற்சிக்கு முக்கியமாக இருக்கும் நீர் தேக்கங்களின் அழிவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வளரும் நாடுகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.