திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டிலும் அமலாக்கத்துறை தற்போது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி கபா (48). இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் என்கிற படத்தை தயாரித்து உள்ளார். கடந்த ஆண்டு திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து, தன்னை ஏமாற்றி ரூ.16 கோடியை பெற்றுக் கொண்டதாக ரவீந்தர் மீது பாலாஜி புகார் அளித்தார். இந்நிலையில் இன்று இருவரின் வீட்டிலும் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.