'கூத்து, பறையாட்டம் போன்ற கலைகளை பட்டப்படிப்பாக கொண்டு வர வேண்டும்' - டி.எம்.கிருஷ்ணா பேச்சு
கூத்து, பறையாட்டம் போன்ற கலைகளை பட்டபடிப்பாக கொண்டு வர வேண்டும் என கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது;
" கலை வாழ்க்கைக்கு தேவையா என்று கேட்டால் கலை சமுதாயத்திற்கு மிகவும் முக்கியம் என்றே சொல்வேன். கலைகள் இல்லாமல் சமுதாயம் இல்லை. முற்போக்கு சிந்தனை சங்க காலத்தில் இருந்து இருக்கிறது.
ஒரு சமுதாயம் முற்போக்காக இருக்க கலை வளர்ச்சி பெறுவது முக்கியம். கலை பலமாக இருக்கும் சமுதாயத்தில்தான் வலிமையான சிந்தனை இருக்கும், வலிமையான கேள்விகள் இருக்கும், அவை தமிழ்நாடு போல இருக்கும்.
சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தில் தேவையான இடத்தில் மாற்றத்தை கொண்டு வந்து காட்டியது தமிழ்நாடுதான். அதற்கு முக்கிய பங்காற்றியவர் பெரியார். தமிழ்நாட்டை பற்றி பேசும் போது பெரியாரை பற்றி பேசாமல் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் கேள்வி கேட்பதை கற்றுக்கொடுத்தவர் பெரியார். பெரியார் சிந்தனையை வளர்பது உங்கள் கையில் தான் உள்ளது. கலைவடிவில்தான் எளிதில் மாற்றத்தை கொண்டு வர முடியும். 200 வருடத்திற்கு முன்னர் செய்ததையே மீண்டும் செய்வது பாரம்பரியம் இல்லை, அதை இன்றைய வடிவில் எப்படி செய்ய வேண்டும் என்பது தான் பாரம்பரியம்.
யார் வேண்டுமானாலும் எந்த கலையும் கற்றுக்கொள்ளலாம் என்பது இது போன்ற பல்கலைகழகங்களால் மட்டுமே சாத்தியமாகிறது. கலையிலும் சமத்துவம் வேண்டும் அவ்வாறு திகழும் இந்த பல்கலைகழகத்திற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாட இசைக்கும் நாட்டுபுற இசைக்கும் ஒரு வேற்றுமை இருக்கிறது. அதை
மாற்ற வேண்டும். இதனை அடுத்து கூத்து, பறையாட்டம் போன்ற கலைகள் பட்டப்படிப்பாக கொண்டு வர வேண்டும். பரதநாட்டியம் முக்கியம் என்றால் கூத்தும் முக்கியம், கர்நாட இசை முக்கியம் என்றால் நாட்டுப்புற பாடல்களும் முக்கியம்” என டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.