பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் | ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசின் குழு ஆய்வை தொடங்கியது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென்மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முக்காணி கிராமம் மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப் பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 17-ம் தேதி முக்காணி ஜங்கஷனுக்கு வந்த சுமார் 200 நபர்கள், அங்குள்ள உமரி தங்கம் லாட்ஜ் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் சிக்கியுள்ளனர்.
3 நாட்களாக அவர்கள் உணவு, தண்ணீர், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அத்துடன் லட்சம் ஏக்கருக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமாகி உள்ளன.
இந்நிலையில், மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையிலான மத்தியக் குழு தூத்துக்குடி வருகை தந்துள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு காணொலி மூலமாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மத்தியக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறது,