“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம்” - சென்னை உயர் நீதிமன்றம்
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை, அதனை தாமதப்படுத்த முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.
மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் கடந்த 3,4 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால், சென்னை வெள்ளத்தில் மிதந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகளில் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்ட தமிழ்நாடு அரசு, டோக்கன்களை விநியோகிக்கும் பணியையும் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. மேலும், நிவாரணம் தகுதியானோருக்கு செல்வதை உறுதி செய்யவும், நிவாரணம் வழங்கியது குறித்து அறிக்கை தரவும் உத்தரவிட்டுள்ளது.