வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!
வெள்ளம் காரணமாக தனது வீட்டில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் 3 நாட்களுக்கு பின்னர் மீட்டனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது இல்லத்தில் இருந்து வெளியே வர இயலாதபடி சிக்கித் தவித்தார். 3 நாட்களாக தனது வீட்டிலேயே சிக்கியிருந்த நிலையில், அவரை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் இன்று மீட்டனர்.
இதையும் படியுங்கள் : முக்காணியில் வெள்ளம் - லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!
தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார் உத்தரவின் பெயரில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பத்திரமாக மீட்டுள்ளனர்.