கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்! டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்!
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்காக, ஆப்ரேட்டரை தேர்வு செய்ய டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
மத்திய அரசு, நாடு முழுதும் விமான சேவைகளை விரிவாக்கம் செய்ய, 'உதான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, மக்களின் தேவைக்கு ஏற்ப விமான சேவை வழங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில் விமானத்தை இயக்க, பயிற்சி பெற்ற விமானிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த பயிற்சியை அளிக்கும் நிறுவனங்கள் வெகு குறைவாகவே உள்ளன. இதனால், பலரும் விமான பயிற்சி பெற ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து நாடுகளுக்கு செல்கின்றனர். எனவே, தமிழ்நாட்டில் விமான பயிற்சி நிறுவனங்களை உருவாக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டது. இதனையடுத்து துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும், சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானிலும் விமான நிலையங்களை அமைக்க முடிவு செய்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கான ஆப்ரேட்டரை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது டிட்கோ நிறுவனம். இதற்காக ஓடுதளத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளை டிட்கோ நிறுவனம் மேற்கொள்கிறது. தேர்வு செய்யப்படும் ஆப்ரேட்டர் நிறுவனம் விமான பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக டிட்கோ மற்றும் தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.