இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம் - மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்!
61 நாட்களுக்கு பின்பு மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்.15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இதனால் வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை, பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டது.
தடைக்காலத்தில் விசைப்படகுகளை பல லட்சம் செலவில் பழுது நீக்கி பராமரிப்பு செய்யும் பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உட்பட தமிழக கரையோரத்தில் பெரும்பாலான படகுகள் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கடலுக்கு செல்வதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தேவையான ஐஸ் டீசல் உபகரணங்களை படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 60 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் பரபரப்பாக உள்ளது.
கடலுக்கு செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை பிரச்னை
இல்லாமல் மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டு போன்ற மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.