இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி - இந்தியா மகத்தான வெற்றி!
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானதில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். பென் டக்கெட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து கேப்டன் ஜாஸ் பட்லர் களமிறங்கினார். நிலைத்து ஆடிய அவர் அரை சதம் கடந்தார். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ரன்களும், ஹாரி புரூக் 17 ரன்களும் எடுத்தனர். இவர்களை தவிர ஜாக்கோப் பெத்தேல் (7), ஜேமி ஓவர்டன்(2), கஸ் அட்கின்சன்(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது.
முதலில் களமிறங்கிய சஞ்சு சாம்ஸன் அபிஷேக் ஷர்மா ஜோடி நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் விளையாடி அணியின் ஸ்கோர் எண்ணிக்கையை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்ஸன் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் அபிஷேக் ஷர்மா களமிறங்கியபோது டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஷர்மா அதிரடியாக விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். 12.5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து எளிய இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 8சிக்ஸர்கள் மற்றும் 5பவுண்ட்ரிக்கள் விளாசி 79ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.