முதல் ஒருநாள் போட்டி | தட்டி தூக்கிய சுப்மன் கில்... 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சால்ட் மற்றும் டக்கெட் சிறப்பாக ஆடினர். இவர்களில் சால்ட் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து டக்கெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் டக் அவுட் ஆனார். தொடர்ந்து, ஆடிய ஜோ ரூட் 19 ரன்களில் வெளியேறினார். இவர்களை அடுத்து ஆடிய பட்லர் மற்றும் பெத்தேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பட்லர் 52 ரன்களிலும், பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, களமிறங்கிய ஆர்ச்சர் 21 ரன்களில் வெளியேறிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், ரோகித் சர்மா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து இறங்கிய சுப்மன் கில் நிதானமாக ஆடி 87 ரன்களை குவித்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களிலும், அகார் படேல் 52 ரன்களிலும், கே.எல்.ராகுல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், 38.4 ஓவரில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.