#Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து | 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்... 8 பேர் கவலைக்கிடம்!
கேரள மாநிலம் நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோயில் காளியாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிலிருந்து தீப்பொறி பறந்து, அருகில் பட்டாசு மூட்டைகள் வைக்கட்டிருந்த இடத்தில் விழுந்துள்ளது.
இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறின. கோயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் விபத்தில் சிக்கினர். இந்த வெடிவிபத்தில் 154 பேர் காயமடைந்துள்ளனர். 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக காசர்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார். இதுகுறித்து காசர்கோடு மாவட்ட காவல்துறை அதிகாரி டி.ஷில்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயில் கமிட்டி தலைவர் மற்றும் செயலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு வெடித்த இடமும், பட்டாசுகள் வைத்திருந்த பகுதியும் அருகருகே இருந்தது. பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த இடத்தில் தீப்பொறி விழுந்ததே விபத்துக்குக் காரணம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வாணவேடிக்கையின் போது குழந்தைகள், பெரியோர்கள் என ஏராளமானோர் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் மொத்தமாக வெடித்ததில் பெரிய தீச்சூவாலை ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்து பயந்துபோன மக்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளனர். பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவர் அருகே ஏராளமானோர் இருந்தனர். அவர்களே படுகாயமடைந்தனர். பலர் ஓடும்போது கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.