திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியார் பெயின்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, தொழிற்சாலையில் பணியில் இருந்த பலரும், தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். இந்த தீ விபத்தில் பணியில் இருந்த சிலர் தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில், தீக்காயமடைந்த 4 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தில், தொழிற்சாலையின் தகரத்திலான மேற்கூரை வெடித்து சிதறி, சாலையில் சென்ற வாகன ஓட்டி மீது விழுந்ததில், படுகாயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததார். தீ விபத்து குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த , திருவள்ளூர், பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் மற்றும் ரசாயண நுரைகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர நீடித்த அப்பணியில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து - 3 பேர் உயிரிழப்பு https://t.co/WciCN2SQmv | #Tiruvallur | #FireAccident | #TamilNadu | #Collector | #SIPCOT | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/XJUehLnCtu
— News7 Tamil (@news7tamil) May 31, 2024
பின்னர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, தீயில் கருகி உயிரிழந்த இரு தொழிலாளர்களின் உடல்கள், எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, தகவலறிந்த திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் மற்றும் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சம்பவ இடம் விரைந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். மீட்பு பணிகளும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.