அகர்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
பண்ருட்டி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பகுதி வெள்ளத்து மாரியம்மன்
கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக
அகர்பக்தி சாம்பிராணி தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்
தொழிற்சாலையில் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை உற்பத்தி பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பணிகள் முடிந்து ஊழியர்கள் வீடு திரும்பிய நிலையில்
நள்ளிரவு தொழிற்சாலை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர்
பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், தீ வேகமாக எரிந்து கரும் புகை மூட்டத்துடன் அப்பகுதி காணப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி முயற்சி
செய்தனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நெல்லிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்களை உடனடியாக வர வைக்கப்பட்டு மூன்று
வாகனங்கள் மூலம் தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இரவில் அகர்பத்தி உற்பத்தி தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. சம்பவத்தை குறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தீயில் சேதம் அடைந்த பொருள்களின் மதிப்பு ஒரு கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.