“திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பொது இடங்களில் மாடுகளை சுற்றித் திரிய விட்டால் ரூ.5000 அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மண்டலத்திற்கு 2 குழுக்கள் வீதம், 4 மண்டலத்திற்கும் 8 பேர் கொண்ட சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல்துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் முறை ரூ.1000 அபராதமும், அதற்கு மேல் தொடர்ந்தால் ரூ.5000 அபராதமும் விதிக்கப்படுவதுடன் காவல்துறை மூலம் உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை உரிமையாளர்கள் மாட்டு கொட்டகையில் வைத்து பராமரித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.