அரசியல் கலந்த ஆன்மீகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்கிறார் - அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!
ஆன்மீகவாதிகளுக்கு 100% துணை நிற்கும் ஒரே ஆட்சி என்றால் அது திராவிட மாடல் ஆட்சி தான். அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்வதற்காக தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு இருக்கிறார் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
“திமுக ஆட்சி அமைத்த பிறகு இன்று ஒரே நாளில் 20 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதில் 5 வைணவ திருக்கோயில்களும் அடங்கும். இதுவரையில் 1200 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடந்துள்ளன. 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கோயில்களை பாதுகாக்கவும், முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்தை காப்பாற்றும் வகையிலும் 100 கோடி ரூபாய் மானியமாக முதலமைச்சர் வழங்கினார்.
கிராமப்புறத்தில் உள்ள சிறிய கோயில்களின் பணிக்காக 1 லட்சம் ரூபாயை உயர்த்தி தற்போது ரூ. 2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இன்று முதல் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் துவங்கப்படவுள்ளது. மேலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாள் ஒன்றிக்கு 10 ஆயிரம் நபருக்கு என 10 நாட்களுக்கு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் இன்று 2 ராமர் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. ஒன்று தூத்துக்குடியில் உள்ள கயத்தாறு, மற்றொன்று தஞ்சாவூர்.
அர்ச்சகர்கள் எங்களுக்கு தோள் கொடுக்கும் தோழர்களாகவும், தெய்வத்திற்கு அடுத்தபட்சமாகவும் தெரிகிறார்கள். இந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்யவும், குடமுழுக்கு மொட்டு போட்டும் தமிழ்நாடு அரசு சார்பில், எந்தவித அறிக்கையும் யாருக்கும் சொல்லவில்லை. தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் வெளியே உள்ள வேணுகோபால் சுவாமி இல்லத்தில் அயோத்தியில் நடைபெறும் குடமுழுக்கு திருவிழா எல்இடியில் திரையிடப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் கண்டு களித்தனர். அன்னதானத்திற்கும் எல்இடி திரை அமைப்பதற்கும் நாங்கள் யாரும் தடை சொல்லவில்லை. அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதே நாங்கள் தெளிவுபடுத்தினோம்.
ஆன்மீகவாதிகளுக்கு 100% துணை நிற்கும் ஒரே ஆட்சி என்றால் அது திராவிட மாடல் ஆட்சி தான். அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்வதற்காக தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு இருக்கிறார். பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. ஆளுநருக்கு சிகப்பு கம்பளம் விரித்து அனைத்து விதமான வரவேற்புடன் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய் என்பது போல் ஆளுநருக்கு தெரிகிறது போல், கோயில் அர்ச்சகர் எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார். அரசியல் கண்ணோட்டத்துடன் தான் மத்திய நிதி அமைச்சர் அணுகுகிறார். உபயதாரர்கள் நிதியில் தான் கோயில் பணிகள் நடைபெறும். உண்டியல் பணத்தில் நடைபெறாது என்ற அடிப்படை கூட தெரியாமல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்.
திருக்கோயில்களின் உள்ளே அன்னதானம், LED திரை அமைக்க எந்த தடையும் விதிக்கவில்லை. அரசியல் காரணத்திற்காக பாஜக அரசு இதனை செய்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்யவும், இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என தமிழ்நாடு மக்கள் இடையே பொய் பரப்புரை மேற்கொள்ளவும் தான் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு பெரிய ராமர் பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார்” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.