பிப்.1-ல் மத்திய பட்ஜெட் - 8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாதம் ஆலோசனை நடத்தி அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிப். 1ம் தேதி 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜன. 31 முதல் பிப். 13 வரையும், 2ம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த முறை வரிமுறையை எளிமைப்படுத்துதல், முதலீடு மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.