#AirForce | வயலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்... பைலட் நிலை என்ன?
ஆக்ரா அருகே விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மிக்-29 போர் விமானம் பயிற்சிக்காக உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் விமானிக்ள் இருவர் பயணித்தனர். ஆக்ரா அருகே சென்றபோது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சுதாரித்த விமானிகள், யாருக்கும் சேதம் ஏற்படாத வண்ணம் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயன்றனர்.
ஆனால் அது பயணளிக்காததால், காகேரோலில் உள்ள சோங்கா கிராமம் அருகே விமானம் சென்றபோது, பாராசூட் உதவியுடன் இருவரும் விமானத்தில் இருந்து குதித்தனர். விமானம் அங்கிருந்த வயலில் விழுந்து நொறுங்கியதுடன் தீப்பிடித்தும் எரிந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்திய விமானப்படை இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ, தொலைவில் விமானிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த செப்.2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியதும், இந்த விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.