Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்...

02:33 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல்பறக்க நடந்துவந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் இந்த முறையும் தனித்து களம் காண்கிறது. இவர்களை தவிர, ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட போகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு, பிரதமர் மோடி, கடந்த 4 மாதங்களில் 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் இந்தியா கூட்டணிக்காக சேகரிக்கிறார்கள்.

பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், இன்று காலை முதலே முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  பாஜக தலைவர் அண்ணாமலை,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்,  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் என அனைவரும் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பரப்புரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், “வரும் ஏப்ரல் 19ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். உங்க வாக்கு உங்க தொகுதியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு மட்டுமல்ல. 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல். இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்கிற தேர்தல் இது” இவ்வாறு கூறி 39 தொகுதிகளில் திமுக சார்பிலும், கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கூறி வாக்கு சேகரித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, "தமிழர் உரிமை மீட்போம்; தமிழ் நாடு காப்போம்", "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு, மத்தியில் தமிழ் நாட்டின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முழு அங்கீகாரத்தையும் அதிமுகவிற்கு வழங்க வேண்டும். தேர்தல் அன்று அதிமுகவின் சின்னமான ‘இரட்டை இலை’க்கு வாக்களியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

விழுப்புரம், மரக்காணம் பேருந்து நிலையம் எதிரே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர்,  “எண்ணற்ற உரிமைகளை இழந்து நிற்கிற என் இனத்தின் மக்கள் சொந்த நிலத்திலேயே உரிமையை இழந்து உணர்வு எழுந்து அடிமையாக நிற்க கூடிய ஒரு தேசிய இனத்தின் மக்கள், நீர் உரிமையை இழந்தோம்.

பசி இல்லாத தேசம்,  மக்களின் வறுமை இல்லாத தேசம், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்த நாடு, எல்லாருக்கும் வேலை, அவரவர் வாழ்விடத்திலே, ஆகச் சிறந்த கல்வி அவரவர் வாழ்விடத்திலேயே இதுதான் என்னுடைய கோட்பாடு” இவ்வாறு பேசினார்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்தவுடன் லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இங்கு போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள முதியோர்களுடன் மாலை நேரத்தில் அமர்ந்து பேச வேண்டும் என கடந்த ஓராண்டாகவே முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்கவில்லை.

தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது" எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார். அவரைத் தேற்றும் வகையில் அங்கிருந்தவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கங்களை எழுப்பினர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:

மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “சித்திரை திருவிழா நேரத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரையை சுற்றியுள்ள நகரங்களுக்கு மின்சார ரயில்கள் அமைக்கப்படும். தேர்தலை அலட்சியம் செய்யாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர் சரவணன் செய்த சேவையை மக்கள் மறந்து விடக்கூடாது.களத்தில் வந்து மக்களுக்காக சேவை செய்வது இந்த அதிமுக கூட்டணி” இவ்வாறு பேசினார்.

Tags :
AIADMKBJPcampaignDMKECIelection campaignElection2024Elections With News7TamilElections2024News7Tamilnews7TamilUpdatesNTKParlimentary ElectionsPMKVCK
Advertisement
Next Article