ஃபெஞ்சல் பாதிப்பு - நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி!
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.
ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி நிவாரண பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளித்தார். விசிக சார்பில் ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக எம்பிக்கள் அனைவரும் தலா ரூ.1 லட்சம் தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.