ஆக்ரோஷமாக கரையை கடக்கும் #FengalCyclone - மின்சார ரயில்கள் ரத்து ; விமான நிலையம் மூடல்!
பெஞ்சல் கரையை கடக்கும் நிலையில் பல இடங்களில் மழைபெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
புயல் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில்கள் சேவை, செங்கல்பட்டு முதல் வண்டலூர் வரையே இயக்கப்படும். பலத்த காற்று வீசுவதால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயான மின்சார ரயில்கள் சேவை சனிக்கிழமை பிற்பகல் 12.14 மணி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல சென்னையில் புயல் கனமழையால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 7 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.