#Fengal புயல் எதிரொலி | மாமல்லபுரம், மெரினா, மரக்காணத்தில் கடல் சீற்றம்... ஆக்ரோஷமாக எழும் அலைகள்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெரினா, மரக்காணம், காசிமேடு உள்ளிட்ட பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எதிரொலியாக சென்னை, மாமல்லபுரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி சீற்றத்துடன் காணப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், மாமல்லபுரம் கடல் பகுதிகளிலும், மெரினா கடற்கரை, காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் கடல் சீற்றம் உள்ளது.