"3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள #Fengal புயல்" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்!
ஃபெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் காணொலி வாயிலாக கூறியதாவது,
"ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் நேற்று இரவு 10.30 - 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில கரையை கடந்துள்ளது. புயல் தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ளது.
இது கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் (அதிகாலை 3-6 மணி வரை) பெரும்பாலும் நகராமல் உள்ளது. புயல் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்க கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழை பாதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 தேதி புதுச்சேரியில் 21 சென்டிமீட்டர் மழை பதிவானது"
இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.