ஃபெஞ்சல் பாதிப்பு - திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனையடுத்து சாத்தனூர் அணையில் டிச.2ஆம் தேதி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தென்பண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர்.
மேலும் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. விழுப்புரம், கடலூர் முழுவதும் கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியது. மழை பாதித்த பகுதிகளில் பல்வேறு கட்சியினரும் நிவாரணப் பொருள்களை அளித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதலமைச்சரும் தன் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் அனைவரும் தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தகவல் தெரிவித்துள்ளார்.