சென்னையில் உடற்பயிற்சியின்போது பெண் மருத்துவர் உயிரிழப்பு!
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அன்விதா (24). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கீழ்ப்பாக்கத்தில், புதிய ஆவடி சாலையில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் மாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவர் உடற்பயிற்சிக் கூடத்துக்கு உடல் எடையை குறைக்க வந்ததாகவும், அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் சோதனை செய்ததில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்பு உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் தங்களுக்கு மாரடைப்பு வந்துவிடுமோ என்று அச்சம்கொள்வார்கள். ஆனால், அவர்களை விடவும், இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்களால், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் தொற்றிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம். கொரோனா தொற்றுக்குப் பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இதுவரை கண்டறியப்படாவிட்டாலும், கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பரவலான சந்தேகம் நிலவுகிறது. இதுவரை இது எங்கும் உறுதிசெய்யப்படவில்லை.
மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவா, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல் மிகப் பிரபலமான, சித்தார்த் சுக்லா, சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி, அமித் மிஸ்த்திரி போன்றவர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.