"தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்தவர் தந்தை பெரியார்" - டி.டி.வி தினகரன்!
பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி, தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்த தந்தை பெரியாரை எந்நாளும் நினைவில் கொள்வோம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். இவர் தன்னுடைய 94வது வயதில் 1973ம் ஆண்டு டிச.24ம் தேதி காலமானார். பெரியாரின் 50வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும், மக்களும் அவரது நினைவு நாளன்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கல்வி அறிவு, சுயமரியாதை எண்ணம், பகுத்தறிவு ஆகிய தன்மைகள் மட்டுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்றுரைத்து தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று.
சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சமதர்ம சமத்துவ சிந்தனை, என தான் கொண்ட கொள்கைகளில் இறுதிவரை உறுதியாக இருந்ததோடு, தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்த தந்தை பெரியாரையும் அவரது சிந்தனைகளையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்."
இவ்வாறு டி.டி.வி தினகரன் தினகரன் பதிவிட்டுள்ளார்.