’ஆகஸ்ட் 15 முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்’- தேவஸ்தானம் அறிவிப்பு!
ஆந்திர மாநிலம் திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான வைணவத் தலமாகும். தினமும் இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு பிராசதமாக வழங்கப்படும் லட்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் தங்கள் நோன்புகளின் ஒரு பகுதியாக முடி காணிக்கை செய்கின்றனர். மேலும் இக்கோயில் இந்தியாவிலேயே அதிக வருமானம் தரும் கோயில்களில் ஒன்றாகும்.
திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்திய பிறகு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானமானது வரும் சோதனைச் சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆகஸ்ட் 15 முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்காக புதிதாகப் பெற ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் மையங்கள் அமைக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அதனைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.