"பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு" - நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளபோது சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதைவிட்டு சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பது தான் திராவிட மாடலா? அசாதாரண நிலையின்போது அதற்குக் காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களைத் திசைதிருப்புவதற்கு, உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா? இப்படி அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தன்னால் நிகழ்ந்த தவறைத் திரையிட்டு மறைக்க தன்னைக் கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்க்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம். சிபிஐ விசாரணை கோரி, உண்மையைக் கண்டறிந்து, இறப்புக்கான நீதியைப் பெற்றுத் தருவது மட்டுமே பலியான 41 அப்பாவி மக்களுக்கு ஒரு பொறுப்பான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இதனை திமுக அரசு உணர வேண்டும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.