விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!
பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்கின் தலையில் உலோக துண்டுகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தின. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடைகளை முன்னேறி சென்ற விவசாயிகளை போலீசாரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். இந்த நடவடிக்கையின் போலிசாரின் தாக்குதலில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பின்னர் உயிரிழந்தவர் 21 வயதுடைய சுப்கரன் சிங் என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து, அவர் இறந்து 9 தினங்களுக்குப் பிறகு நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுப்கரன் சிங்கின் பிரேத பரிசோதனையில், அவர் தலைக்குள் உலோகத்திலான பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வி வசாயப் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை கொண்டு மற்றும் ரப்பர் குண்டுகளை மட்டுமே போலீசார் பயன்படுத்திய நிலையில், சுப்காரனின் உடலுக்குள் உலோக துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அந்த உலோக துகள்கள் போலீசார் பயன்படுத்தியதா? அல்லது தனிநபர் யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.