For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொன் ஏர் பூட்டும் திருவிழா - மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!

04:06 PM Apr 14, 2024 IST | Web Editor
பொன் ஏர் பூட்டும் திருவிழா   மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்
Advertisement

கோவில்பட்டி அருகே உள்ள பிதப்புரம் பகுதியில் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும், பொன் ஏர் பூட்டும் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Advertisement

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் இன்னும் கிராமப் பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கிராம விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றுமையாக, பொன் ஏர் பிடித்து விவசாய நிலங்களை உழுது கொண்டாடி வருகின்றனர். சித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர் மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினியின் சிலைக்குப் பூஜை செய்து வழிபட்ட தீவிர ரசிகர்!

பொன் ஏர் என்றும் மதி ஏர் என்றும் அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு, ஆண்டின் முதல் நாளில் அரசன் உழவை தொடங்கி வைப்பான். இவ்வாறு செய்வது, அரசருக்கும் மேலானவர்கள் உழவர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காக என்று கூறப்படுகிறது.தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால், அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏர் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பொன் ஏர் என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும். பாரம்பரிய விதைகளின் முளைப்பு திறன் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்ள வசதியாக இவ்வாறு செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிதப்புரம் கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தில் உள்ள அனைத்து ட்ராக்டர்களும் ஜோடிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த நிலத்தில் உழவு செய்ய பயன்படுத்தப்பட்டது. மேலும் நவதானிய விதைகள் விதைக்கப்பட்டன.

சித்திரை முதல் நாளில் விவசாய பணிகள் தொடங்கினால், விவசாயம் சிறப்பாக இருக்கும், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதால் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏர் பூட்டியதாகவும், முன்னர் காளைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது ட்ராக்டர்களை பயன்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement