For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவசாயிகளின் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் - வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன!

10:31 AM Feb 16, 2024 IST | Web Editor
விவசாயிகளின் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம்   வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன
Advertisement

விவசாயிகள் போராட்டத்தின் 4வது நாளான இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் வடமாநிலங்கள் ஸ்தம்பித்துள்ளன.

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறினர். ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்தது. எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசாருடன் மோதலுக்குப் பிறகு அவர்கள் இரவு எல்லைப்பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக கூறினர்.

பொறுமையை சோதித்தால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். “ஊசி முதல் சுத்தியல் வரை. எங்களின் வண்டிகளில் கற்களை உடைக்கும் கருவிகள் உட்பட அனைத்தும் உள்ளன. ஆறு மாத ரேஷன் உடன் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளோம். ஹரியானாவைச் சேர்ந்த எங்கள் சகோதரர்களுக்குக்கூடப் போதுமான டீசல் எங்களிடம் உள்ளது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை” என்று பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இருந்து வந்துள்ள விவசாயி ஒருவர் கூறினார்.

விவசாயிகளின் பயணத்தை முறியடிக்க டிராக்டர்களுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல இடங்களில் நடைபெறும் போலீஸ் சோதனை காரணமாக எல்லைப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் 3வது நாளான நேற்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இந்த நிலையில் மத்திய அரசுடன் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களின் பேச்சுவாரத்தை  முடிந்ததும், விவசாய சங்கங்களின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்ததாவது..

"பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. எனவே போராட்டம் அமைதியாக தொடரும்.. வேறு எதுவும் செய்ய மாட்டோம்.  சக விவசாயிகளிடமும் இதுகுறித்து முறையிடுவோம். மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள், அதுவரை நாங்கள் காத்திருப்போம்... ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வோம்” என தெரிவித்தார்.

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் ஒருபகுதியாக போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MNREGA) ஊரகப் பணியாளார்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற தொழில்துறை மற்றும் சேவைத் துறை நிறுவனங்கள் ஆகியவை இன்று (பிப்ரவரி 16-ம் தேதி) நடைபெறும் நாடு தழுவிய விவசாய சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக செயல்படமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல நொய்டாவில் விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு 144தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை விவசாய அமைப்புகள் நடத்தி வருவதால் பேருந்துகள் இயங்கவில்லை. சிபிஎஸ்இ தேர்வு நடைபெற்று வரும் நிலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருவதால் பல இடங்களுக்கு பேருந்து இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி , ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் ஸ்தம்பித்துள்ளன.

Tags :
Advertisement