தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி...நடந்தது என்ன?
குஜராத்தில் தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்டதாக தலித் விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில், அதானி நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின விவசாயி மன்வர். இவரிடம் கடந்த 2023-ம் ஆண்டு அதானி நிறுவனம் நிலத்தை வாங்கியுள்ளது. ஆனால், நிலத்திற்கான பணம் ரூ.11.14 கோடியை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாக நேரிடும் என அதானி நிறுவனம் அந்த விவசாயியிடம் கூறியதாக தெரிகிறது.
எனவே, அந்த தொகைக்கு பதிலாக தேர்தல் பத்திரங்களை வாங்கினால், சில ஆண்டுகளில் அந்த தொகை மதிப்பு கூடும் என அதானி நிறுவன மேலாளர் மஹிந்திர சிங்க் சோதா கூறியதாக தெரிகிறது. இதனை நம்பி தேர்தல் பத்திரங்களை வாங்க மன்வர் குடும்பம் ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்ட அந்த தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்வர் குடும்பத்தினர், மார்ச் 18-ம் தேதி குஜராத் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, அதானி நிறுவனத்தின் 4 இயக்குநர்கள், மேலாளர் மகேந்திர சிங், பாஜக பிரமுகர் ஹேமந்த் உள்ளிட்டோர் மீது விவசாய குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட SBI தரவுகளின்படி, இவற்றில், அக்டோபர் 16-ம் தேதி, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜக கட்சியாலும், அக்டோபர் 18-ம் தேதி, 1 கோடியே 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளவை சிவசேனா கட்சியாலும் பணமாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.