வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் ஜாமீனில் விடுவிப்பு!
வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்தார். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎப் வாசனை மதுரை அண்ணா நகரில் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு தரப்பு, கார் ஓட்டுநர் உரிமம் பெற TTF வாசன் LLR பெற்றுள்ள நிலையில் அதனை வைத்து தேசிய நெடுச்சாலையில் வாகனத்தை இயக்கி உள்ளார் என வாதம் முன்வைக்கப்பட்டது.இந்நிலையில் காரை வேகமாக ஓட்டவில்லை என்றும் தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டதாகவும் டிடிஎஃப் வாசன் தரப்பு வாதம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட மதுரை மாவட்ட ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கினார்.