எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது!
சென்னை வியாசர்பாடி பி.வி காலனி ஒன்பதாவது தெருவை சேர்ந்தவர் சோமு என்கின்ற சோமசுந்தரம். இவர் மீது 2001ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கொலை வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த சேராவின் வலது கரமாக திகழ்ந்தவர்.
எம்.கே. பாலன் வழக்கில் தண்டனை பெற்ற சோமு கடந்த 2017ஆம் ஆண்டு
பரோலில் வந்தார். பரோல் முடிந்து சிறைக்கு செல்வதை தவிர்த்து சோமு தலைமறைவானார். சோமசுந்தரத்தை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் சோமு வியாசர்பாடி பகுதிக்கு வருவதாக புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மாலை முல்லை நகர் அருகே மாறு வேடத்தில் வந்த சோமுவை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரை எம்.கே.பி. நகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் சுற்றி திரிந்ததும், சிறையிலிருந்து இவர் சில ரவுடி கும்பல்களை இயக்கியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சோம சுந்தரத்திடம் எம்கேபி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.