ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!
பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.