வியாபாரிகளிடம் பணம் பறித்த போலி போலீஸ் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை !
பல்லாவரம் பகுதிகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பணம் பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டார்.
பல்லாவரம் அடுத்த பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில், சங்கர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதனைப் பயன்படுத்தி, திருநீர்மலை சாலையில் கடைகளுக்குச் சென்று கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினர் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அப்பகுதியில் காவல்துறை சீருடையில் பெயர் இல்லாத போலி போலீஸ் ஒருவர் கடை உரிமையாளர், மீது குட்கா போதை பொருட்களை விற்பதாகவும் கடையை சீல் வைத்துவிடுவதாகவும் மிரட்டி பணம் ரூபாய் 15000 பறித்துள்ளார். அவர் மீது சந்தேகம் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு அக்கடை உரிமையாளர், கொடுத்த புகாரின்பேரில் போலி போலீஸை சங்கர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை செய்ததில், கைது செய்யப்பட்டவர் ஸ்ரீபெரும்புதூர் வெங்காடு கிராமத்தை சேர்ந்த முரளி (40) என்பதும் இவர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக இருப்பதும் தெரியவந்தது. போலி போலீஸை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையதில் வெளியாகி வைரலாகி வருகிறது.