அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த டெல்லி செல்லும் ஃபட்னாவிஸ்!
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக படுதோல்வியை தழுவிய நிலையில், அதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசிக்க முன்னாள் துணை முதலமைச்சர் ஃபட்னாவிஸ் டெல்லி செல்கிறார்.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலின் முக்கிய திருப்பமாக சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அமைந்துள்ளது.
காரணம் பெரும்பான்மை இல்லாத பாஜவுக்கு இந்த கட்சிகளின் ஆதரவாலேயே, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆட்சியமைக்கவுள்ளார். இந்த தேர்தல் பாஜவுக்கு பெரும் தோல்வியை தந்துள்ளது என்றே கூறலாம். காரணம் தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட பாஜக கைப்பற்றவில்லை.
அதுபோல அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவான இடங்களிலேயே பாஜக வெற்றிப் பெற்றுள்ளது. இதனையடுத்து இதற்கான காரணத்தை அறிய பாஜக முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் கலந்தாலோசிக்க மகாராஷ்டிரா முன்னாள் துணை முதலமைச்சர் ஃபட்னாவிஸ் இன்று டெல்லி செல்கிறார்.
அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூடி இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அமித்ஷாவுடனான பட்னாவிஸ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நேற்று பட்னாவிஸ் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்.