“துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்” - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் தேர்வர்கள் 273 பேரும் என மொத்தம் 9,13,084 தேர்வர்கள் 4113 தேர்வுமையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.
இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 48,500- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
9498383075, 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவுறுத்திவுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
இந்த நிலையில் நாளை தேர்வெழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள
அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.