"#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை" - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!
வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26-11-2024), மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
வக்பு சட்டத்திருத்த மசோதா மீது ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறோம். ஆகஸ்ட் 22, 2024 அன்று முதல் கூட்டம் நடந்த நிலையில், இதுவரை 25 அமர்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அவற்றில், இதற்குத் தொடர்பில்லாத அமைப்புகள் சான்றுகளையும்/கோரிக்கைகளையும் அளித்தவையும் அடக்கம். அதேவேளையில், பீகார், புது டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இன்னும் இந்தக் குழுவிடம் தங்கள் அறிக்கையினை அளிக்கவில்லை. மேலும், தொடர்புடைய பல அமைப்புகள் இக்குழுவிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நேரம் கோரி வருகின்றனர்.
வக்பு சட்டத் திருத்த மசோதா என்பது தற்போதைய சட்டத்தில் பல பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ள மிகவும் விரிவான சட்டம் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் இந்திய மக்கள்தொகையில் பெரும் பிரிவினரை பாதிக்கக் கூடியவை ஆகும். ஆகவே, இக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள மூன்று மாத காலம் என்பது போதாது என்பது மட்டுமின்றி, அது தவறான பரிந்துரைகளை அளிக்க வழிவகுத்துவிடும் அபாயமும் உள்ளது. முறையான கலந்துரையாடல் மற்றும் ஆய்வினை மேற்கொள்ள இக்குழுவுக்கு நியாயமான அளவு காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும்.
மக்கள் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பு வழங்காமல். சட்டங்கள் வெறும் சம்பிரதாயத்துக்கு விவாதிக்கப்பட்டால், அது சட்டமியற்றும் வழிமுறையின் சட்டத்தகுதியையே பாதிக்கும். இது நாடாளுமன்றத்தின் மாண்புக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.