அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞர் முன்னாள் எம்பி மஜீத் மேமன் என பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by Factly
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மஜீத் மேமன், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞர் என பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மும்பை தொடர் தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞரான மஜீத்மேமனை தேசியவாத காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி ஆக்கியது என்றும், கசாப் மீது வழக்குத் தொடுத்து மரண தண்டனையை உறுதி செய்த உஜ்வல் நிகாமுக்கு பாஜக எம்பி டிக்கெட் வழங்கியது என்றும் ஒரு பதிவு பரவலாகப் பேசப்படுகிறது. சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. அவற்றை இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகியவற்றில் காணலாம். இந்த பதிவுகளில் கூறப்பட்ட கூற்றை உண்மை சரிபார்ப்போம்.
பரப்பப்பட்ட பதிவு:
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞரான மஜீத் மேமனை, சரத் பவார் ராஜ்யசபா எம்.பி ஆக்கினார். அதே நேரத்தில் கசாப்பின் மரண தண்டனையை உறுதி செய்த வக்கீல் உஜ்வல் நிகாமுக்கு பாஜக எம்பி சீட் வழங்கியது.
உண்மை:
நாட்டில் குறிப்பிடத்தக்க குற்றவியல் வழக்கறிஞரான மஜீத் மேமன், தீவிரவாதி அஜ்மல் கசாப் வழக்குடன் தொடர்புடையவர் அல்ல. அவர் ஏப்ரல் 2014 முதல் ஏப்ரல் 2020 வரை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2022 இல், மஜீத் மேமன் NCP யில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் (TMC) சேர்ந்தார். மும்பை 26/11 தீவிரவாத தாக்குதல் வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞரான உஜ்வல் நிகாமுக்கு மும்பை வடக்கு மத்திய எம்பி சீட்டை பாஜக ஒதுக்கியுள்ளது. எனவே பதிவில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது.
வைரலான கூற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடினோம். மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் அரசு வழக்கறிஞராக ஆஜரான உஜ்வல் நிகம் நாடு முழுவதும் அறியப்பட்டவர் ஆனார். இந்த வழக்கில் அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு, சக்தி மில்ஸ் கும்பல் பலாத்கார வழக்கு மற்றும் அகமதுநகர் பாலியல் மற்றும் கொலை வழக்கு ( இணைப்பு 1 , இணைப்பு 2 மற்றும் இணைப்பு 3 ) போன்ற பல்வேறு முக்கிய வழக்குகளில் அவர் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். இந்நிலையில், வழக்கறிஞர் உஜ்வல் நிகாமுக்கு மும்பை நார்த் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
எங்கள் தேடுதலின் போது, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்பிற்காக வாதாட எந்த வழக்கறிஞரும் ஆர்வம் காட்டாததால், நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பல வழக்கறிஞர்களை ( 1, 2, 3 ) நீதிமன்றம் நியமித்தது . குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் நியாயமான விசாரணைக்கு உட்படுத்த உரிமை உண்டு. இதன்படி கேபி பவார், அப்பாஸ் காஸ்மி ஆகிய வழக்கறிஞர்கள், முதலில் நீதிமன்றத்தால் கசாப்பின் பாதுகாப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் ஒத்துழையாமையால் அவர்கள் நீக்கப்பட்டனர். அமீன் சோல்கர் மற்றும் பர்ஹானா ஷா ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கசாப் தரப்பில் வாதாட நியமிக்கப்பட்டனர். இதே போன்று ராஜு ராமச்சந்திரன் என்கிற வழக்கறிஞர் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டின் போது கசாப்பின் வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனையைஒ உறுதி செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதாடினார்.
இந்நிலையில், குற்றவியல் வழக்கறிஞரான மஜீத் மேமன், தீவிரவாதி அஜ்மல் கசாப் வழக்கு விசாரணையில் தொடர்புடையவர் அல்ல. கசாப்பை ( இணைப்பு 1 , இணைப்பு 2 ) பாதுகாப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார் . மஜீத் மேமன் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரை பிரதிநிதித்துவப்படுத்தினார். குற்ற வழக்குகளில் பல திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரப்பிலும் வாதாடியுள்ளார். மஜீத் மேமன் ஏப்ரல் 2014 முதல் ஏப்ரல் 2020 வரை NCP யின் மாநிலங்களவை எம்பியாக இருந்தார் ( இணைப்பு 1 & இணைப்பு 2 ). 2022 இல், மஜீத் மேமன் என்சிபியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) சேர்ந்தார் .
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.