திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!
திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை கோயிலாகும். இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாத கடைகள், தேங்காய், பூ விற்பனை நிலையம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் காலவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இவ்வாறு காலவதியான பஞ்சாமிர்தங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் அந்த கடைகளில் காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கோயில் இணை ஆணையர் ரமணி அங்குள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் குப்பைத்தொட்டியில் போட்டு அழிக்கப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இச்சம்பத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.