விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மிரிண்டா பாட்டில்! ரூ.10,060 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!
காலாவதியான மிரிண்டா பாட்டிலை விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 10 ஆயிரத்து 60 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சிவா என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் இந்த கடையில் மிரிண்டா பாட்டிலை வாங்கி குடித்துள்ளார். இந்நிலையில், சுந்தர்ராஜிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் மிரண்டா பாட்டில் காலாவதியானதை கவனித்துள்ளார். இது குறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுந்தர்ராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, சூப்பர் மார்க்கெட் நிர்வாகி சிவா சுந்தரராஜிற்கு மிரண்டா பாட்டில் வாங்கிய 60 ரூபாயும், மன உளைச்சலுக்கு 5000 ரூபாயும், மேலும் வழக்கு செலவிற்கு 5000 ரூபாய் என மொத்தம் 10 ஆயிரத்து 60 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.