அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
அதில் ஆகஸ்ட் 18ம்தேதி பிற்பகல் 1 மணி முதல் செப்.18-ம் தேதி பிற்பகல் 1 மணி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் - நடத்துனர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர்19ம்தேதி தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டை நவம்பர் 13 முதல் https://tnstc.onlinereg.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி சீட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.