கால்வாயில் கிடந்த EVM... மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை!
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கால்வாயில் தூக்கி எறிந்து வன்முறையில் சிலர் ஈடுபட்டனர்.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் என மொத்தம் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் இன்று 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வன்முறை ஏற்பட்டது.
பங்கர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி 40, 41ல் வாக்குப்பதிவு இயந்திரத்தை அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் சிலர் வீசியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களால் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி, வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி அருகே உள்ள கால்வாயில் வீசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கு வங்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. இருப்பு வைக்கப்பட்டிருந்த ரிசர்வ் இஎவிஎம் இயந்திரங்கள் தான் தண்ணீரில் வீசப்பட்டன. பயன்பாட்டில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சேதம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.