“ஒவ்வொருவரும் இணைந்து நீதித்துறையின் மேன்மைக்கு பாடுபட வேண்டும்” - #MHC தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேச்சு!
ஒவ்வொருவரும் இணைந்து நீதித்துறையின் மேன்மைக்கு பாடுபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி ஸ்ரீராமிற்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வரவேற்பு நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் உட்பட நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தலைமை நீதிபதிக்கு வரவேற்புரை அளித்தனர்.
இந்நிகழ்வில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசியதாவது,
“தமிழ் அன்னைக்கும், மதுரை மண்ணிற்கும் என் முதல் வணக்கம். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்து, உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பழமையான மதுரையை ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னுடைய கருத்து படி உயர்ந்த கலாச்சாரம், பண்பாடு நிறைந்த மதுரையை போன்று ஏதென்ஸ் பழமையானது என கூற வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.
மதுரை தூங்கா நகரம், மீனாட்சி அம்மன் கோயில், மணம் வீசும் மல்லி , ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரியமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. நான் மதுரை மாநகருக்கு பல முறை வந்துள்ளேன். மதுரையில் உள்ள மக்களின் அன்பும், பாசமும் என்னை கவர்ந்து உள்ளது. ‘சமன் செய்து சீர்தூக்கி’ என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறையும், நீதி பரிபாலனமும் செயல்பட வேண்டும்.
மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்கள் மிகவும் பழமையான உயர் நீதிமன்றங்கள் ஆகும். நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, பல நீதிபதிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக செயல்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் இணைந்து நீதித்துறையின் மேன்மைக்கு பாடுபட வேண்டும். நன்றி. வணக்கம். ஜெய் ஹிந்த்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.