சிறிய மழைக்கே திமுக அரசு அலறுகிறது! | அதிமுக பொதுச்செயலாளர் #EPS குற்றச்சாட்டு!
சின்ன மழைக்கே சென்னை மாநகரம் பல்வேறு இடங்களில் தத்தளித்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சி அலுவலகம் முன் கூடிய தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு மழை பெய்யவில்லை. வெயில் தான் அடிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது போல் பெரிதாக மழை பெய்யவில்லை. நேற்று முன் தினம் மழை பெய்யும் என்றார்கள். அப்போது ஓரளவு பெய்தது. மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கபட்டது. ஆனால் பெரிதாக மழை பெய்யவில்லை.
பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கவில்லை. ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியே சென்றிருக்க முடியாது. வெறும் மழை தான் பெய்திருக்கிறது. ஆனால் இதற்கே திமுக அரசு அலறுகிறது. அதிமுக பல புயல்களை பார்த்திருக்கு. தானே புயல், ஒகி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களை கண்டு புயல் வேகத்தில் பணியாற்றி மக்கள் பிரச்சினைகளை தீர்த்தது அரசு அதிமுக அரசு. அதிமுக அரசை குறை சொல்வதற்கு எவருக்கும் தகுதி கிடையாது.
டீ வாங்கி கொடுத்துவிட்டால் போதுமா?.. தூய்மை பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுக்கிறார். அதே தூய்மை பணியாளர்களின் குறைகளை போக்கினீர்களா?.. பல்லாயிரக்கணக்கான பேர் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொண்டு வந்தனர். 17 ஆண்டு காலம் தூய்மை பணி செய்து வந்தனர். கொரோனா காலத்தில் தன் உயிரையும் துச்சமென நினைத்து பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்கள் பலரை நீக்கிவிட்டாங்க.
இப்போது டீ வாங்கி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?.. தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டாங்க.. அதிமுக ஆட்சியில் தான் தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டது. டீ வாங்கி கொடுப்பதால் டிவியில் பரபரப்பு வரும். ஆனால் மக்களுக்கு என்ன பயன்? வெள்ளை அறிக்கை கேட்டால் தருவது அரசின் கடமை. ஆனால் வெள்ளை அறிக்கை கேட்டால் உதயநிதி ஸ்டாலின் முதிர்ச்சியில்லாமல் பதில் அளிக்கிறார். அனைத்து துறைகளின் வேலையையும் உதயநிதி ஸ்டாலினே செய்கிறார்.,”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.