"திமுக சார்பாக நான் கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி வேண்டும்" - அமைச்சர் கே.என்.நேரு!
திருநெல்வேலியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக அரசுக்கு மக்களை பற்றி கவலையே இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு, அவரு ரொம்ப கவலைப்பட்டுட்டாரு, அவர் கவலைப்பட்டு இருந்தால் ஏன் வீட்டுக்கு செல்ல போகிறார்? திமுகவை விட்டா பேசுவதற்கு வேறு வாய்ப்பே இல்லை அதனால் பேசுகிறார்கள்.
எடப்பாடி காரில் முகத்தை மறைத்த விவகாரம் மற்றும் அதிமுக அலுவலகம் டெல்லியில் செயல்படுவதாக எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து விஜய் மாநாட்டிற்கு பாரபட்சம் பார்க்காமல் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, திமுக சார்பாக நான் ஒரு கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும்.
பொதுமக்களின் பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதி வழங்கப்படுகிறது. நாங்கள் எதிர்க்கட்சி ஆக இருக்கும் போது எங்களுக்கு பல நேரங்களில் மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கேட்கும் இடத்தில் கொடுத்தால் பொதுமக்கள் பாதிப்பை சந்திப்பார்கள் என்ற நோக்கதோடு காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள்.
திமுகவிற்கு மட்டும் இல்லை, எல்லா கட்சிகளுக்கும் ஒரே நடவடிக்கை தான் எடுக்கின்றார்கள். பொன்னாக்குடி கிராமத்தில் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அதனை சீர் செய்வதாக தெரிவித்துள்ளார்.