Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” - இபிஎஸ் பேச்சு

07:25 PM Apr 14, 2024 IST | Jeni
Advertisement

ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. எப்போது பார்த்தாலும் என்னைப் பற்றி அவதூறாக பேசுவது. அதிமுகவை திட்டமிட்டு விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை சிலர் அழிக்கப் பார்க்கிறார்கள். அதிமுகவை பற்றி யார் தவறாக பேசினாலும், அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். கடந்த கால வரலாறே இதற்கு எடுத்துக்காட்டு. அதிமுகவை அழிக்க பூமியில் இதுவரை யாரும் பிறக்கவில்லை. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுக கட்சி மக்களின் கட்சி.

ஸ்டெர்லைட் ஆலை அமைக்க 86 ஏக்கர் நிலம் கொடுத்தது ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது தான். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தோம். ஸ்டெர்லைட் சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி, திமுக எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலம் நடத்தி கலவரம் ஏற்படுத்த துணை நின்றீர்கள். அப்பாவி மக்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தினீர்கள்.

மின் கட்டண உயர்வை கண்டித்து போரட்டம் நடத்திய 14 விவசாயிகளை சுட்டு கொன்றது திமுக ஆட்சி. மாஞ்சோலை தொழிலாளர்கள் 16 பேரின் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம். பல துப்பாக்கிச் சூடுகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வு எடப்பாடி ஆட்சியில் கொண்டு வந்தாக பச்சை பொய் பேசுகின்றனர். மத்திய இணையமைச்சராக திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் இருக்கும் போது தான் நீட் கொண்டு வரப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வர முடியவில்லை. தமிழகத்தில் நடைபெறுவது குடும்ப ஆட்சி. தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் இல்லை. நான்கு முதலமைச்சர் உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒற்றைச் செங்கல்லை உதயநிதி காட்டி வருகிறார். 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியினர் 38 பேர் வெற்றி பெற்ற நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஏன் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருக்கும். அங்கே பேசாமல் இருந்துவிட்டு, ஒற்றை செங்கல்லை ஊர் ஊராக எடுத்துப் போய் உதயநிதி விளம்பரம் தேடுகிறார்.

ஊர் ஊராக ஒற்றைச் செங்கல்லை காட்டும் திமுக, பல லட்சம் செங்கல்லால் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடைப் பூங்காவை 3 ஆண்டு காலமாக திறக்காமல் ஏமாற்றி வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவினை கட்டிக் கொடுத்தும் திமுக அரசால் அதனை திறக்க முடியவில்லை. இன்று வரை ரிப்பன் வெட்ட முடியவில்லை. நிறைவேறாத திட்டத்திற்கு செங்கல்லை காட்டி விளம்பரம் தேடும் திமுக அரசு, முடிக்கப்பட்ட கட்டடத்தை திறக்கவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் அது. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு என பல்வேறு நன்மைகளை அளிக்கும் கால்நடை பூங்கா திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.

கொள்ளையடிப்பதற்காகத் தான் மாநிலத்தை போலவே, மத்தியிலும் ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்து, தமிழகத்தின் மானத்தை வாங்கிவிட்டது. பல ஊழலுக்கு சொந்தமான கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் திமுக அரசு. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக நடைபெற்றது. ஆனால் இன்றைய ஆட்சியில் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு என உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, விலைவாசி விண்ணை முட்டுகிறது. இதனால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
AIADMKEdappadipalanisamyElection2024Elections2024ElectionswithNews7tamilEPS
Advertisement
Next Article