ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் - அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இத்தாலி!
இத்தாலிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 23 வினாடிகளிலேயே முதல் கோல் அடித்து வரலாற்று சாதனை படைத்தது அல்பேனியா.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அல்பேனியாவும், இத்தாலியும் மோதின. இந்த போட்டியில் முதல் 23 வினாடிகளிலேயே அல்பேனியா தனது முதல் கோலை அடித்தது. இதன்மூலம் யூரோ கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை படைத்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு கிரீஸ் அணிக்கு எதிராக ரஷ்யாவின் டிமிட்ரி கிரிசெங்கோ 67 வினாடிகளில் அடித்த கோலே அதிவேக கோல் சாதனையாக இருந்தது. இதையடுத்து தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து 16 நிமிடங்களிலேயே 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அந்த முன்னிலையை தக்கவைத்த இத்தாலி கடைசி வரை அல்பேனியா அணியை கோல் அடிக்க விடவில்லை. போட்டியின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.
அடுத்ததாக இத்தாலி ஸ்பெயின் அணியை சந்திக்க உள்ளது. அல்பேனியா குரோஷியா அணியை சந்திக்க உள்ளது.