யூரோ கால்பந்து தொடர்: - அரையிறுதியில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை!
யூரோ 2024 கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இத்தாலி, தொடரை நடத்தும் ஜெர்மனி, ரொனால்டோவின் போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் வெளியேறின. தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
யூரோ கால்பந்தில் ஆறாவது முறையாக அரையிறுதியில் பங்கேற்கிறது ஸ்பெயின். இதில் 2020 தவிர, மற்ற 5 முறை பைனலுக்கு முன்னேறியது. பிரான்ஸ் 5 முறை அரையிறுதியில் பங்கேற்று, 3 முறை பைனலுக்குள் நுழைந்தது. ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் இதுவரை 36 போட்டிகளில் மோதியுள்ளன.
இதில் ஸ்பெயின் 16போட்டிகளிலும், பிரான்ஸ் 13 போட்டிகளிலும் வென்றுள்ளது. 7 போட்டி 'டிரா' ஆனது. இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோத உள்ளன. இதனால் இன்று விறுவிறு மோதலை எதிர்பார்க்கலாம்.