#ErodeRobbery | சென்னிமலையில் வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்…
சென்னிமலையில் வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அர்த்தநாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர்
கோகுலகிருஷ்ணன், இவர் தனியார் வங்கியின் காசாளராக பணிபுரிந்து
வருகிறார். இதனையடுத்து கோகுலகிருஷ்ணனுக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம்
நடைபெற உள்ள நிலையில் வீட்டில் கோகுலகிருஷ்ணனின் தந்தை விஸ்வநாதன்(நடக்க
முடியாதவர்) மற்றும் கோகுலகிருஷ்ணனின் அக்கா ரம்யா ஆகியோர் மட்டுமே
இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 8ம் தேதி திருமண அழைப்பிற்கு
கோகுலகிருஷ்ணன் பத்திரிகை வைக்க வெளியே சென்றிருந்த நிலையில் திடீரென
வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் ரம்யாவை சேலை மற்றும்
ஷால் ஆகியவற்றால் கட்டி போட்டுவிட்டு பீரோவில் கல்யாண செலவிற்காக வைத்திருந்த
3லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் ரம்யாவை
அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கோகுலகிருஷ்ணன் சென்னிமலை
காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு
செய்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்தாக கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி
காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது கோகுலகிருஷ்ணன் சகோதரி ரம்யா கடன் பிரச்சினை காரணமாக பல்வேறு இடங்களில் பணம் கேட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சந்தேகமடைந்த போலீசார் ரம்யாவிடம் பல்வேறு கேள்விகளால் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது படித்து பட்டம் பயின்ற ரம்யா தனது தந்தை வீட்டின் அருகே
வசித்து வந்ததாகவும்,கடந்த மூன்று மாதங்களாகத் தம்பி கோகுலகிருஷ்ணன்
திருமணத்திற்காகத் தந்தை வீட்டிலிருந்து வந்துள்ளார். இதற்கிடையே ரம்யா தனது
கணவர் சுபாஷ் என்பவரது நூல் உற்பத்தி சார்ந்த தொழிலைக் கவனித்து வந்ததாகவும்
அதில் 3லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அதை சமாளிக்க சில இடங்களில்
கடன் கேட்டு கிடைக்காத நிலையில் வீட்டில் தம்பியின் திருமணத்திற்காக
வைத்திருந்த 3லட்சம் ரூபாய் பணத்திலிருந்து மூன்று தவணைகளாகப் பணத்தை எடுத்து
கடன் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கூகுள் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பி
இருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் பணத்தை திருடி விட்டு நாடகமாடிய சகோதரி ரம்யாவை சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்த கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தம்பி திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை உடன் பிறந்த சகோதரி திருடி விட்டு மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.